முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் சிவன் திருக்கோயில்

வடமாகாணம் – முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் சிவன் திருக்கோயில்

அருள் நிறைந்த திருக்கோயில் அமர்ந்தருளும் சிவனே
அன்புநெறி தழைத்தோங்க அருள் புரிவாய் ஐயா
நாடியுந்தன் திருப்பாதம் சரணடைந்தோம் சிவனே
அணைத்தெம்மை ஆட்கொள்வாய் தான்தோன்றீஸ்வரப் பெருமானே

தானாகத் தோன்றியவரே தவமுனியே சிவனே
தரணியெங்கும் நல்லமைதி நிலவிடவே அருள் புரிவாய் ஐயா
தேடியுன்னைச் சரணடைந்தோம் சிவனே
அணைத்தெம்மை ஆட்கொள்வாய் தான்தோன்றீஸ்வரப் பெருமானே

மருதநிலச் சூழலிலே கோயில் கொண்ட சிவனே
மாசில்லா நல்வாழ்வைத் தந்தருள் புரிவாய் ஐயா
உன்னையே உள்ளத்திலிருத்தி சரணடைந்தோம் சிவனே
அணைத்தெம்மை ஆட்கொள்வாய் தான்தோன்றீஸ்வரப் பெருமானே

வட இலங்கைத் திருநிலத்தில் இருந்தாளும் சிவனே
வற்றாத நற்கருணை நிலவிடவே அருள்புரிவாய் ஐயா
வந்துன்னை என்றுமே சரணடைந்தோம் சிவனே
அணைத்தெம்மை ஆட்கொள்வாய் தான்தோன்றீஸ்வரப் பெருமானே

வன்னிப் பெருநிலத்தை ஆளுகின்ற சிவனே
வெற்றிகொண்ட பெருவாழ்வைத் தந்தருள்புரிவாய்
வேதனைகள் போக்கிடவே உன்னடியைச் சரணடைந்தோம் சிவனே
அணைத்தெம்மை ஆட்கொள்வாய் தான்தோன்றீஸ்வரப் பெருமானே

ஒட்டுச் சுட்டான் நல்லூரில் எழுந்தருளும் சிவனே
எழுச்சிமிகு எதிர்காலம் தந்தருள் புரிவாய்
நலங்கள் பெற்று நலமடைய உன்னடியைச் சரணடைந்தோம் சிவனே
அணைத்தெம்மை ஆட்கொள்வாய் தான்தோன்றீஸ்வரப் பெருமானே.

ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *