வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் – வட்டுக்கோட்டை அராலி அருள்மிகு ஐயனார் திருக்கோயில்
அழகுமிகு திருக்கோயில் கொண்டுறையும் ஐயனாரே
அருள் தந்து ஆதரித்து காத்தருள வாருமைய்யா
நம்பியுந்தன் தாள்பணிவோம் நலன் காக்க வேண்டுகிறோம்
அராலியில் வீற்றிருக்கும் ஐயனார் திருவடிபோற்றி
காவல் செய்து காத்தருளும் காவலரே ஐயனாரே
காலமெல்லாம் உடனிருந்து ஆதரிக்க வாருமைய்யா
கேட்கும் வரம் தந்தெம்மை வளப்படுத்த வேண்டுகிறோம்
அராலியில் வீற்றிருக்கும் ஐயனார் திருவடிபோற்றி
வளம் கொண்ட தமிழ் மண்ணில் இருந்தருளும் ஐயனாரே
வளமான எதிர்காலம் தந்திடவே வாருமைய்யா
பெருமைமிகு பெருவாழ்வை எமக்கருள வேண்டுகிறோம்
அராலியில் வீற்றிருக்கும் ஐயனார் திருவடிபோற்றி
எழுச்சிமிகு உணர்வு தந்து வாழச்செய்யும் ஐயனாரே
ஏற்றமிகு பெருவாழ்வைத் தந்திடவே வாருமைய்யா
உயர்ச்சிமிகு எதிர்காலம் தந்தருள வேண்டுகிறோம்
அராலியில் வீற்றிருக்கும் ஐயனார் திருவடிபோற்றி
பாதகங்கள் களைந்துலகைக் காக்க வந்த ஐயனாரே
பகையில்லா நல்லுறவைத் தந்திடவே வாருமைய்யா
நிலைத்த நல்ல நிம்மதியை எமக்கருள வேண்டுகிறோம்
அராலியில் வீற்றிருக்கும் ஐயனார் திருவடிபோற்றி
வெண்பருதி மீதமர்ந்து அருள் பொழியும் ஐயனாரே
வெற்றிகளை பெற்று நாம் உயர்ந்துவிட அருளிடவே வாருமைய்யா
தோல்வியில்லா உயர் நிலையை எமக்கருள வேண்டுகிறோம்
அராலியில் வீற்றிருக்கும் ஐயனார் திருவடிபோற்றி.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.