வடமாகாணம் – மன்னார் மாவட்டம்- மன்னார் சாந்திபுரம் அருள்மிகு மருதோடைப் பிள்ளையார் திருக்கோயில்
வந்த துன்பம் போக்கி வரும் துன்பம் தடுத்தருளும் பிள்ளையார்
வெற்றிகளைத் தந்து தலைநிமிர்ந்து வாழவைப்பார்
தடுமாறா மனம் தந்து தாங்கி நிற்பார் எங்களையே
சாந்திபுரம் மருதோடைப் பிள்ளையாரை நம்பிடுவோம் சரணடைவோம்
ஆழி சூழ் உலகினையே அசைத்தாளும் பிள்ளையார்
ஆறுதலைத் தந்தெம்மைத் தலைநிமிர்ந்து வாழவைப்பார்
நோயற்ற வாழ்வு தந்து சுக தேகியாய் வாழச் செய்வார் எங்களையே
சாந்திபுரம் மருதோடைப் பிள்ளையாரை நம்பிடுவோம் சரணடைவோம்
யாழரசன் பூமியிலே கோயில் கொண்ட பிள்ளையார்
பாழ்படா நிலை தந்து தலைநிமிர்ந்து வாழவைப்பார்
தீய செயல் சிந்தனைகள் அண்டாமல் வாழவைப்பார் எங்களையே
சாந்திபுரம் மருதோடைப் பிள்ளையாரை நம்பிடுவோம் சரணடைவோம்
கேதீஸ்வர நாதர் குடி கொண்ட திருப்பதியில் இருந்தருளும் பிள்ளையார்
கேடுகள் நெருங்காமல் தடுத்தெம்மை வாழவைப்பார்
கொடுஞ் செயல்கள் துன்பங்களைத் துரத்தியே வாழவைப்பார் எங்களையே
சாந்திபுரம் மருதோடைப் பிள்ளையாரை நம்பிடுவோம் சரணடைவோம்
ஊழ் வினைகள் களைந்துலகை உய்யவைக்கும் பிள்ளையார்
உற்ற துணையாயிருந்து உறுதி தந்து வாழவைப்பார்
உற்றார் உறவுகளுடன் ஒன்றிணைந்து வாழவைப்பார் எங்களையே
சாந்திபுரம் மருதோடைப் பிள்ளையாரை நம்பிடுவோம் சரணடைவோம்
தலைதாழா நிலையெமக்கு தந்தருளும் பிள்ளையார்
திறமையுடன் முன்னேறும் வலிமை தந்து வாழவைப்பாய்
செந்தமிழாலே பாடும் எமக்கருளி வாழவைப்பார் எங்களையே
சாந்திபுரம் மருதோடைப் பிள்ளையாரை நம்பிடுவோம் சரணடைவோம்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.