வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம்- சாவகச்சேரி சங்கத்தானை- அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்
அறம் காத்து மறம் அழிக்க அவதரிக்கும் பெருமானே
அல்லல் படும் எம் நிலையை மாற்றிடவே அருளுமைய்யா
அச்சமின்றி நிம்மதியாய் நாமென்றும் வாழ்ந்திடவே
ஆசிதந்து அரவணைப்பாய் சங்கத்தானை கோயில் கொண்ட கந்தசுவாமிப் பெருமானே
சூரபத்மன் கொட்டத்தை அடக்கிவிட அவதரித்த பெருமானே
சூழவரும் துன்பங்களைப் போக்கிடவே அருளுமைய்யா
சுழன்று வரும் இவ்வுலகில் நிம்மதியாய் வாழ்ந்திடவே
ஆசிதந்து அரவணைப்பாய் சங்கத்தானை கோயில் கொண்ட கந்தசுவாமிப் பெருமானே
விநாயகனுக் கிளையோனாய் வந்துதித்த பெருமானே
விரக்தி நிலை அண்டாமல் வாழ வழி அருளிடைய்யா
வீரமிகு நல் வாழ்வை நாமென்றும் வாழ்ந்திடவே
ஆசிதந்து அரவணைப்பாய் சங்கத்தானை கோயில் கொண்ட கந்தசுவாமிப் பெருமானே
தமிழ்த் தெய்வம் என்ற பெருமை கொண்ட பெருமானே
தரணியிலே தமிழர் தலைநிமிர்ந்து வாழவழி அருளிடைய்யா
திறமையுடன் முன்னேறி மகிழ்வுடனே வாழ்ந்திடவே
ஆசிதந்து அரவணைப்பாய் சங்கத்தானை கோயில் கொண்ட கந்தசுவாமிப் பெருமானே
ஆறுபடை வீடு கொண்ட அற்புதனே பெருமானே
ஆதரவு தந்தெம்மை அணைத்து அருளிடைய்யா
அன்பு மனம் கொண்டவராய் நாமென்றும் வாழ்ந்திடவே
ஆசிதந்து அரவணைப்பாய் சங்கத்தானை கோயில் கொண்ட கந்தசுவாமிப் பெருமானே
நம்பியடி தொழுவோர் நலன் காக்கும் பெருமானே
நிம்மதியை நிரந்தரமாய் எமக்களித்து அருளிடைய்யா
நேர்மையாய் நாமென்றும் தளர்வின்றி வாழ்ந்திடவே
ஆசிதந்து அரவணைப்பாய் சங்கத்தானை கோயில் கொண்ட கந்தசுவாமிப் பெருமானே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.