கிழக்கு மாகாணம்- திருகோணமலை மாவட்டம் – திருகோணமலை, தென்னமரவடி, அருள்மிகு பிள்ளையார் திருக்கோயில்
அமைதியாயிருந்து உலகையாளுகின்ற பெருமானே
அஞ்சாநிலை தந்தெமக்கு வாழ்வழிக்க அருளிடைய்யா
அச்சநிலை எம்மை விட்டு அடியோடு அகன்றிடவே
கருணை செய்து காப்பளிப்பாய் தென்னமரவடி கோயில் கொண்ட பிள்ளையாரே
ஆறுதல் தந்துலகை ஆட்சி செய்யும் பெருமானே
ஆறுதலைத் தந்தெமக்கு நிம்மதியை அருளிடைய்யா
ஆதரவு தந்தெம்மை அணைத்து அருளிடவே
கருணை செய்து காப்பளிப்பாய் தென்னமரவடி கோயில் கொண்ட பிள்ளையாரே
கலக்கமில்லா நல்வாழ்வை உவந்தளிக்கும் பெருமானே
கவலையில்லா மனத்தினையே என்றுமெமக்கு அருளிடைய்யா
கரவு கொண்ட உறவுகள் எமை விட்டு அகன்றிடவே
கருணை செய்து காப்பளிப்பாய் தென்னமரவடி கோயில் கொண்ட பிள்ளையாரே
காலமெல்லாம் உடனிருந்து காத்தருளும் பெருமானே
கால வெள்ளம் அள்ளிவரும் வேதனைகள் அகற்றியெமக்கு அருளிடைய்யா
காசினியில் நல்லுறவு எமை நாடி வந்திடவே
கருணை செய்து காப்பளிப்பாய் தென்னமரவடி கோயில் கொண்ட பிள்ளையாரே
நலம் காத்து வளமளிக்கும் நாயகனே பெருமானே
நன்றியுடை மனத்தினையே என்றுமெமக்கு அருளிடைய்யா
நல்லவர்கள் நட்பினையே தவறாது நாம் பெறவே
கருணை செய்து காப்பளிப்பாய் தென்னமரவடி கோயில் கொண்ட பிள்ளையாரே
தமிழ் ஒலிக்கும் திருமலையில் வந்துறையும் பெருமானே
தயக்கமின்றி நல்லருளை எமக்கு நீ அருளிடைய்யா
தவறில்லா நல்வாழ்வை நாம் என்றும் பெற்றிடவே
கருணை செய்து காப்பளிப்பாய் தென்னமரவடி கோயில் கொண்ட பிள்ளையாரே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.