சப்பிரகமுவ மாகாணம் – இரத்தினபுரி மாவட்டம் – இறக்குவானை – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோயில்
அருள் தந்து ஆற்றல் தந்து அரவணைக்கும் தாயே
அன்பு கொண்டோர் மனங்களிலே உறைந்தருள்வாய் நீயே
இறக்குவானை கோயில் கொண்ட தலைமகளே தாயே
மருள் போக்கி காவல் செய்து காத்தருள்வாய் நீயே
வாழ நல்ல வழி காட்டி வளமளிக்கும் தாயே
வாழ்விற்கு ஒளியேற்றி நன்மை செய்வாய் நீயே
மலை சூழ்ந்த நன்னகரில் இருந்தருளும் தாயே
மலைத்து நிற்போர் மனக்கவலை போக்கிடுவாய் நீயே
தீமைகளைத் துடைத்தெறியத் துணையிருக்கும் தாயே
தீயபகை கொடுமைகளைக் களைந்திடுவாய் நீயே
பாடித்துதித்துன் பாதம் பற்றுகின்றோம் தாயே
பாரெங்கும் நிம்மதியை உறுதி செய்வாய் நீயே
உயர்ந்த நகர் குடியிருந்து அருள் பொழியும் தாயே
உரிய நல்ல நேர்வழியைக் காட்டிடுவாய் நீயே
நேர்மை மிகு பெருவாழ்வு வாழவேண்டும் தாயே
நேர்வழியைக் காட்டி எம்மை ஆட்கொள்வாய் நீயே
தளராத மனம் தந்து வழி காட்டும் தாயே
தரணியில் எம் நிலையை உயர்த்திடுவாய் நீயே
நீதி நெறி நின்று நாம் வாழ வேண்டும் தாயே
நிலைத்த நல்ல வாழ்வளித்து வளம் தருவாய் நீயே
மாரியம்மா என்றழைக்க வந்தருளும் தாயே
மீட்சி தந்து ஆதரித்து அரவணைப்பாய் நீயே
உன்பாதம் சரணடைந்தோம் காத்தருள்வாய் தாயே
உடனிருந்து உறுதுணையாய் இருந்திடுவாய் நீயே.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.