வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம், வட்டுக்கோட்டை – சித்தன்கேணி அருள்மிகு சிவன் திருக்கோயில்
அண்டமெல்லாம் பரவிநின்று ஆளுகின்ற பெருமானே
அளவிலா கருணையைப் பொழிந்துலகை காப்பாய்
அஞ்சும் நிலை இல்லா நிலை எமக்கருள வேண்டும்
சித்தன்கேணி கோயில் கொண்ட சிவனே நீயே சரணம்
அழகுமிகு திருக்கோயில் கொண்டுறையும் பெருமானே
அச்சமில்லா மனநிலையை எமக்களித்துக் காப்பாய்
அருள் கொண்டு கருணையினை எமக்கருள வேண்டும்
சித்தன்கேணி கோயில் கொண்ட சிவனே நீயே சரணம்
வளங்கொண்ட தமிழ் மண்ணில் நின்றருளும் பெருமானே
மனத்துயர்கள் நெருங்காது நாம் வாழ அருள்வாய்
தடையில்லா முன்னேற்றம் எமக்கருள வேண்டும்
சித்தன்கேணி கோயில் கொண்ட சிவனே நீயே சரணம்
இன்பநிலை தந்தெம்மை இயக்குகின்ற பெருமானே
துன்பநிலை நெருங்காமல் நாம்வாழ அருள்தருவாய்
துணிவுடனே நாம்வாழ எமக்கருள வேண்டும்
சித்தன்கேணி கோயில் கொண்ட சிவனே நீயே சரணம்
கங்கை அம்மை முடிகொண்டு காத்தருளும் பெருமானே
கவலையின்றி நிறைவுடனே நாம் வாழ அருள்வாய்
கொடுமைகள் அண்டாநிலை எமக்கருள வேண்டும்
சித்தன்கேணி கோயில் கொண்ட சிவனே நீயே சரணம்
அன்புருவாய், அருளுருவாய் இலங்குகின்ற பெருமானே
ஆபத்துகள் அண்டாமல் என்றும் நாம் வாழ அருள்வாய்
நெஞ்சுறுதி தளும்பாமல் வாழ எமக்கருள வேண்டும்
சித்தன்கேணி கோயில் கொண்ட சிவனே நீயே சரணம்.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.