Kovil

அட்டன், அருள்மிகு மாணிக்கப் பிள்ளையார் திருக்கோயில்

மத்திய மாகாணம் – நுவரெலியா மாவட்டம் – அட்டன், அருள்மிகு மாணிக்கப் பிள்ளையார் திருக்கோயில்

எட்டுத் திக்கும் அருள் பரப்பி ஏற்றிடைய்யா கருணை ஒளி
மட்டில்லா பேருவகை வழங்குகின்ற தலைமகனே
ஓட்டிவிடு தீமைகளை ஒளிரச் செய்வாய் நன்மைகளை
அட்டன் மாநகரமர்ந்த மாணிக்கப் பிள்ளையாரே

மலை சூழ்ந்த மாநிலத்தில் குன்றினிலே கோயில் கொண்டாய்
அலைமோதும் மனங்களிலே ஆறுதலைத் தருவோனே
நிலைகுலையா நிம்மதிக்கு உன்துணையே வேண்டுமைய்யா
தலை தாழ்த்தி வணங்குகிறோம் மாணிக்கப் பிள்ளையாரே

எழில் சூழ்ந்த மலையகத்தின் மத்தியிலே அமர்ந்தவரே
வழித்துணையாயிருந் தெமக்கு நல்ல வழிகாட்டிடைய்யா
இழிநிலையைப் போக்கிவிடு இன்பநிலை தந்துவிடு
விழிமலர்ந்து நிற்பவரே மாணிக்கப் பிள்ளையாரே

சலித்து நிற்போர் மனங்களிலே நம்பிக்கை ஒளி நீயே
கிலி கொண்டு துவண்டு நிற்போர் துயர்போக்கி அருள்வோனே
வலிந்து வரும் துன்பநிலை அகற்றி வழிகாட்டிடைய்யா
நலிவில்லா நலமளிக்கும் மாணிக்கப் பிள்ளையாரே

நன்மைகள் பெருகிடவும் நானிலத்தோர் மகிழ்ந்திடவும்
உண்மையெங்கும் ஓங்கிடவும் ஊரெல்லாம் செழித்திடவும்
மென்மையுள்ளம் கொண்டவனே அடிபணிந்தோம் உன்னையைய்யா
அன்பைப் பெருக்கியெம்மை ஆட்கொள்ளும் மாணிக்கப் பிள்ளையாரே

வீதிவலம் வந்து நலம் அருளுகின்ற திருமகனே
நாதியில்லை என்ற நிலை எமக்கென்றும் இல்லையைய்யா
ஆதிசிவன் பெற்ற மகன் அருகினிலே நீயிருக்க
கதி நீயே கருணை செய்து ஆட்கொள்வாய் மாணிக்கப் பிள்ளையாரே.

ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top