மேல் மாகாணம் – கொழும்பு மாவட்டம், கொழும்பு மாநகர் கொச்சிக்கடை, அருள்மிகு பொன்னம்பல வாணேசுவரம் சிவன் திருக்கோயில்
அழகுமிகு கற்கோயில் கொண்டுறையும் சிவனே
அவனியிலே அமைதியையே நிறுவிடுவாய் ஐயா
அச்சம் அகற்றியெம்மை ஆட்கொள்ளும் சிவனே
அரவணைத்துக் காத்தருள வந்திடுவாய் ஐயா
திருநடனம் புரிந்துலகை இயக்குகின்ற சிவனே
திக்கெங்கும் நல்லருளைப் பரப்பிடுவாய் ஐயா
தெளிவு தந்து வழிநடத்தும் சிவனே
தோல்வியில்லா வாழ்வு தந்து வாழ அருள் செய்திடுவாய் ஐயா
சிதம்பரத்தில் மையம் கொண்டு உலகாளும் சிவனே
சீரான வாழ்வுதனை உறுதி செய்வாய் ஐயா
நம்பிக்கை தந்தெம்மை ஆட்கொள்ளும் சிவனே
தர்மநிலை காத்தருள துணையிருப்பாய் ஐயா
கோணமாமலை அமர்ந்த கோமகனே சிவனே
காலமெல்லாம் அருள்தந்து ஆதரிப்பாய் ஐயா
கிலேசமில்லா வாழ்வு தந்து அரவணைக்கும் சிவனே
கௌரவமாய் நாம் வாழ உடனிருப்பாய் ஐயா
பொன்னம்பல வாணேசுவரத்திலுறை பேரருளே சிவனே
புதுவாழ்வு தந்தெம்மை எழுச்சியுறச் செய்வாய் ஐயா
பொலிவு கொண்ட வாழ்வு தந்து அரவணைப்பாய் ஐயா
தமிழர் நிலை உயர்வு பெற வழிதருவாய் ஐயா
அன்னை உமையவளை அருகு கொண்ட சிவனே
அஞ்ஞானம் போக்கியெம்மை விழித்தெழச் செய்வாய் ஐயா
பகை கொண்டோர் கொடுஞ்செயலைத் தடுத்திடுவாய் ஐயா
எம்முள்ளம் நிறைந்திருந்து எமையாள்வாய் ஐயா.
ஆக்கம் – த மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.